சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிஃபர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதையும் கொள்ளையடித்தவர் தான் நடிகை ரேகா. அதன் பிறகு கே. பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த புன்னகை மன்னன் படத்தில் ஓபனிங் சீனில் கமலின் காதலியாக வந்து பரிதாபமாக உயிர்விடும் வேடத்தில் அசத்தியிருப்பார்.
தொடர்ந்து தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே உள்ளிட்ட பல படங்களில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆண்டுகள் கடந்தோடிய பின் ரோஜா கூட்டம் படத்தில் பூமிகாவின் அம்மாவாக நடித்தார் இவர். அதன் பின் பிக் பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் பின்னர் சின்னத்திரை தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
80-களில் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும் பொழுதுபோக்கை கடந்து இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து இருக்கின்றன. அந்த காலகட்டங்களில் எடுக்கப்பட்ட படங்கள் வெறும் கதையை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்டவை அல்ல, பலரது வாழ்வை பிரதிபலிப்பவையாக இருந்தது. இன்று ஒரு நாளில் 5 படங்கள் திரையில் வெளி வந்தாலும், பழைய நினைவுகள் இன்றும் மலரும் நினைவுகளாகவே இருக்கின்றன.
இந்நிலையில், 80-களின் கனவுக் கன்னியான ரேகா 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாயகியாக திரையுலகில் களம் இறங்குவது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும் இவர், அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகும் முதல் படமான 'மிரியம்மா' என்னும் படத்தில் நடிக்கிறார். இவருடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை 'யாத்திசை' புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார். பெண்களை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநரான மாலதி நாராயண் தயாரிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருபது ஆண்டுகளுக்குப் பின் கதையின் நாயகியாக ரேகா நடிக்க உள்ளது மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியாக இருக்கும் நிலையில், கதையில் முக்கியத்துவம் உள்ளதால் நடிக்க ரேகா ஒப்புக்கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மாமன்னன் இசை வெளியீட்டு விழா: தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்பு?