சென்னை: ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் காலியாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுக - காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்பட 77 பேர் இறுதி வேட்பாளர்களாக களம் கண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவில் பெற்ற வாக்குகளை எண்ணும் பணி, இன்று (மார்ச் 2) காலை முதல் நடைபெற்று வந்தது. இதன் முடிவில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தை பிடித்தார். இதன் மூலம் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை விட 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
யார் இந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்? திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கிய அண்ணாதுரை, தனக்கு பக்க பலமாக இருப்பவர், ஈவிகே சம்பத் என்று அடிக்கடி குறிப்பிடுவார். இவருடைய மூத்த மகன்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன். இளங்கோவனின் படிப்பை பொறுத்தமட்டில், சென்னை மாநில கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். மேலும் இவர் கல்லூரி படிப்பை முடித்த பின்பு, இளைஞர் காங்கிரஸ் அணியில் சேர்ந்து செயல்பட்டார்.
அரசியல் பயணத்தை பொறுத்தவரை, இளங்கோவன் 1984ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அந்த தேர்தலில் அதிமுக - காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி வைத்திருந்தது. இதில் வெற்றி பெற்ற இளங்கோவன், முதன்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்தார். பின்னர், அரசியல் வாழ்க்கையில் இருந்தாலும் இளங்கோவன் பெரிதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படவில்லை.
பதவி விலகிய ஈவிகேஎஸ்: இருப்பினும், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் செயலாளர், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் தலைவர் என பல பதவிகள் வகித்தார். பிறகு 2004ஆம் ஆண்டு நடந்த மக்களவை தொகுதிக்கான தேர்தலில், இளங்கோவன் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் தேர்தல் களம் கண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இளங்கோவனுக்கு மத்திய ஜவுளி மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் பொறுப்பை கொடுத்தார்.
பிறகு 2009 மற்றும் 2019 ஆகிய இரண்டு மக்களவைத் தேர்தல்களிலும், இளங்கோவன் தோல்வியைத் தழுவினார். மேலும் அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார். முதலில் 2000ஆம் ஆண்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் தமிழ் மாநில கட்சி இணைந்தபோது செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2வது முறையாக கமிட்டித் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் திமுக, உடன் கூட்டணி அமைத்தது. இதில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கியது. ஆனால், காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த இளங்கோவன் பதவி விலகினார். இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி மூலம் கிட்டத்தட்ட 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ளார்.
இதையும் படிங்க: வெற்றிக்கு உதவாத இரட்டை இலை; தோல்விக்கான காரணம் - அதிமுகவில் அடுத்த மூவ் என்ன?