அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள் தெரிவித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதில், "பெண்மையைவிட பெருமைக்கு உரியது ஏதும் உண்டோ? இறைவன் படைப்பில் எத்தனையோ அதிசயங்களைக் காண்கிறோம். இத்தனை காலம் இந்தப் பூமி இயங்குவதற்குக் காரணமே இறைவனின் அற்புதப் படைப்புகள்தாம். அத்தனைப் படைப்புகளிலும் மகத்தானது அந்த இறைவனே உருவானதுபோல் படைக்கப்பட்டிருக்கும் பெண்மைதான்.
வியப்புக்குரிய படைப்பாய், தன்னையே முழுமையாக அர்ப்பணித்து உலகம் இயங்க உந்து சக்தியாய் வாழும் பெண்மைக்கு வணக்கம் செலுத்தவும், பெண்களுக்கான சமத்துவத்தையும், உரிமைகளையும் வலியுறுத்தவும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினமாம் மார்ச் 8ஆம் நாளில் நம் தாயாக, மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணைவியாக, ஏன் தெய்வமாகவே வாழ்ந்துவரும் பெண்கள் அனைவருக்கும், இருகரம் கூப்பி மனமார நன்றிகூறி வணக்கம் தெரிவித்து மகிழ்கிறோம்.
ஒரு சமூகம் எந்தளவு பெண் கல்வியிலும், பெண்களுக்கான வேலைவாய்ப்பிலும், அதிகாரப் பகிர்தலில் பெண்களுக்கு சமத்துவத்திலும் முன்னேற்றம் காண்கிறதோ அந்தளவுக்குத்தான் அந்தச் சமூகத்தின் பொருளாதார மேம்பாடும், ஒட்டுமொத்த வளர்ச்சியும் இருக்கும் என்பதை எத்தனையோ அறிவியில் ரீதியான ஆய்வுகள் நமக்கு விளக்கிக் கூறுகின்றன.
அன்னையாய், அன்பு மகளாய், தோளோடு தோள் நிற்கும் பாசமிகு சகோதரியாய், தன்னையே அர்ப்பணிக்கும் தாரமாய் பல வடிவங்களில் நம்மை வாழ்விக்கும் பெண்மையை வணங்குவோம். பெண்மையை போற்றுவோம். பெண்மையால் பெருமைகொள்வோம்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.