சென்னை: அதிமுக கொடி, கரை வேட்டி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது. மேலும், பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கில் உறுப்பினர்களை நீக்க அதிமுக பொதுக்குழுவுக்கு உரிமையுள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது. மேலும், தீர்ப்பில் பொதுக்குழு செல்லும் எனவும், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் எனவும் கூறினர். தீர்ப்பானது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு ஆதரவாக வந்ததால், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் விமரிசையாக கொண்டாடினர்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “உண்மை, நீதி, நியாயத்திற்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவருடன் இருப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக கட்சி கொடி மற்றும் சின்னம் என்பது எங்களுக்கு மட்டும் சொந்தமானது. எனவே, அதிமுக கொடி, கரை வேட்டி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - உணவு பரிமாறி மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்!
அதனைத்தொடர்ந்து பேசிய அவர், மாநாடு எங்களுக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பானது ஒற்றை தலைமையில், அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவதற்கு ஏதுவாக வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு சென்றாலும், இன்று வந்த தீர்ப்பு போன்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பை வழங்கும். நீட் விவகாரத்தில் திமுகவை நம்பி அதிமுக எப்படி போராடும்? எங்களுக்கு ரகசியம் தெரியும் என்று சொல்லி தற்போது எங்களுடன் வந்து போராடுங்கள் என்று சொல்வது நியாயமா? எனக் கூறினார்.
அதிமுகவை பொருத்தவரை, நீட் தேர்வானது தமிழகத்திற்கு வேண்டாம் என்பதே நிலைப்பாடு. ஆனால், திமுக நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றி வருகிறது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும். மேலும், கனகராஜின் சகோதரர் மற்றவர்களின் தூண்டுதலினால் இவ்வாறு பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை சிபிஐ விசாரணை தேவை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. ஓபிஎஸ் மனு தள்ளுபடி!