சென்னை: தமிழ்நாட்டில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது, கிடங்குகளில் பதுக்கி வைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக கிடைத்த தகவலின் படி, கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவ ராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது, தடை செய்யபட்ட குட்கா பொருள்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.
அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டன.
இந்நிலையில் இந்த குட்கா ஊழல் தொடர்பாக திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. பின்னர் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கிடங்கு உரிமையாளர்கள் மாதவ ராவ், சீனிவாச ராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேரை கடந்த 2016ஆம் ஆண்டு கைது செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் டெல்லி சிபிஐ போலீசார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேரின் பெயர்கள் மட்டுமே இடம் பெற்றதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கபட்டது.
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. அதேபோல, இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸ் உயரதிகாரிகளுக்கும் சிபிஐ போலீஸார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருவதால் அடுத்தகட்டமாக இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு (2022) ஜூலை 19ஆம் தேதி அனுமதி வழங்கியது. இதனையடுத்து 11 பேருக்கு எதிராக டெல்லி சிபிஐ தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை கடந்த நவம்பர் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால், அதனை திருத்தம் செய்தும், வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விவரங்கள் மற்றும் அவர்களின் வாக்கு மூலம் தொடர்பான விவரங்களை இணைத்தும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விவரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சிபிஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐக்கு திரும்ப அளித்தது.
இந்த வழக்கு இன்று சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், பிழைகளை திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை. எனவே, கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் உயிரை விட்ட இளைஞர் - சோகத்தில் குடும்பம்