சென்னை: மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவான்மியூர் கலாஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருந்த ஹரி பத்மனை கைது செய்தனர்.
ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வரும் இந்த கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்திருந்தது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மாணவி தனது புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு தனது முதுநிலைப் படிப்பின் போது ஹரி பத்மன் தன்னை பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தியதாகவும், அவரின் பாலியல் தொந்தரவு காரணமாகத் தான் படிப்பை பாதியிலேயே கைவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
தற்போது பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை, நோட்டா ஆகிய படங்களில் நடித்த நடிகையும், கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவியுமான அபிராமி இந்த கலாஷேத்ரா பாலியல் வழக்கு குறித்து சமீபத்தில் கூறிய கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது "நான் கலாஷேத்ரா கல்லூரியின் முன்னாள் மாணவி. எப்போதும் இது போன்ற விவகாரத்தில் ஒருவர் சார்புடைய கதையை மட்டும் தெரிந்து கொண்டு கருத்து கூறுவது நல்லதல்ல. 89 வருட பழமை வாய்ந்த நிறுவனத்தில் இப்படி ஒரு பிழை கூறுவதற்கு அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. கலாஷேத்ரா என்ற பெயரை உச்சரிக்க தெரியாதவர்கள் கூட கலாஷேத்ரா நிறுவனம் குறித்து அவதூறு பேசுகின்றனர்" என்று அபிராமி கூறியது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளானது.
இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் பேசிய விஷயத்திற்கு நடிகை அபிராமி காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். குட்டி பத்மினி பேசியது, "நீங்கள் திரைத்துறையில் இருப்பதால் ஒருவர் உங்களை தொடுவது என்பது எந்த உணர்ச்சியையும் அளிக்காது. ஆனால் மற்ற பெண்களுக்கு அப்படியா” என்று நடிகை அபிராமியை பார்த்து குட்டி பத்மினி பேசியிருந்தார். இதற்கு பதிலடி தெரிவித்து நடிகை அபிராமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் பெண்களுக்காக குரல் கொடுக்கும் லட்சணம் இது தான் "சினிமாத்துறையில் உள்ள அனைத்து பெண்களும் உங்களை போன்று உணர்ச்சியற்றவராக இல்லை கேபி ஆண்ட்டி. மேலும் ஒரு விஷயம், உங்களுக்கே பத்திகிட்டு வருதுனா, நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆண்ட்டி! நாங்க பாத்துக்கறோம் ஆண்ட்டி. உங்கள் உடல் நலனை நன்றாக பார்த்து கொள்ளுங்கள்" என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த விஷயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை