சென்னை: நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு திரும்ப செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறயதாக விஷால் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் விஷால் 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் அவரது அசையும், அசையா சொத்துக்கள் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், விஷால் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, செப்.19ஆம் தேதி விவரங்களை தாக்கல் செய்யாத விஷாலை மீண்டும் செப்.22ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, வழக்கறிஞர் பி.டி.ஆஷா உடன் விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது, உயர் நீதிமன்றத்தை விட பெரியவராக எண்ண வேண்டாம்? என விஷாலுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், ஏன் விஷால் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது? என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், வங்கிகளிலிருந்து கூடுதல் ஆவணங்களை பெற்று, இணையதளம் மூலம் தாக்கல் செய்ய வேண்டும் என விஷாலுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (செப் 24) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் 5 வங்கிகளில் உள்ள ஆறு கணக்குகளின் விவரங்களும், சொத்து உள்ளிட்ட வாகனங்களின் விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது லைகா தரப்பில், நடிகர் விஷால் முழுமையான தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை எனவும் இதனால் தங்கள் தரப்பில் விளக்கமளித்து மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: நெல்லை - சென்னை வந்தே பாரத்.. கன்னியாகுமரி வரை நீட்டிப்பு! பிரதமருக்கு ஓ.பி.எஸ் கடிதம்!