சென்னை: நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்பிரமணியம் (85) இன்று ( மார்ச் 24 ) அதிகாலை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நீண்ட காலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட அவர் இன்று இயற்கை எய்தினார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அஜித்தின் தந்தை மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நடிகர் அஜித் அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார். தந்தையின் இழப்பால் கதறி அழுத அவரது அம்மாவை கட்டியணைத்து நடிகர் அஜித் தேற்றினார். நடிகர் அஜித்துக்கு அனுப் குமார் என்ற அண்ணனும் அனில் குமார் என்ற தம்பியும் உள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தான் அஜித்தின் அப்பாவும் அம்மாவும் தனியாக வசித்து வந்தனர். அப்பா தமிழ், அம்மா பெங்காலி மொழி பேசும் நிலையில் இருவரும் காதல் திருமணம் புரிந்தவர்கள். இருவரையும் அஜித்தான் பார்த்துக்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
அஜித்தின் அப்பாவின் மறைவு செய்தி கேட்டதும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், குஷ்பூ உள்ளிட்டோர் அஞ்சலி செய்தி வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விஜய் நேரில் சென்று அஜித்துக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் பல நடிகர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறி வருகின்றனர். நடிகர் ரமேஷ் கண்ணன் வீடியோ மூலம் அஜித்தின் தந்தை இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தந்தையின் மறைவை குடும்ப நிகழ்வாக பார்க்கிறோம் என்று அஜித் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் தனது தந்தைக்கு சிகிச்சை அளித்து பார்த்துக்கொண்ட மருத்துவர்களுக்கும் அஜித் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இறுதிச் சடங்கின்போது ஷாலினி அஜித், ஷாமிலி, ரிச்சர்ட் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் உடன் இருந்தனர். மேலும் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது அஞ்சலியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவில் முதல்முறையாக 'Music entrepreneurship' துறையில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன் - ஹிப்ஹாப் ஆதி