சென்னை: தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான தங்கர்பச்சான் இன்று (ஜூலை.7) சென்னை காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார். அதில்,’கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரைப்பட துறையிலும், இலக்கிய துறையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நான் கூறாத கருத்துக்களை எனது பெயரில் சமூக வலைதளத்தில் அடையாளம் தெரியாத சிலர் பதிவிட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.
பொதுவாழ்விலும், எனது தொழில் சார்ந்த திரைப்படத்துறையிலும் எனக்கு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். இறுதி எச்சரிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தெரிவித்து இருந்தேன். ஆனால் தற்போதும் அது போன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
புகாரளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் தங்கர்பச்சான்,’சிலர் நான் கூறியதுபோல் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவை ஆதரிப்பதாக பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்தியா முழுவதும் திரைத்துறையில் உள்ளவர்கள் எதிர்த்து வரக்கூடிய மசோதாவை, நானும் எதிர்க்கிறேன்.
ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவுக்கு எதிர்ப்பு
ஆனால் நான் ஆதரிப்பதாக மாற்றி பொய்யாக பரப்புவது, தொழிலுக்கும், எனது பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். இந்த கருத்துகளை பரப்பி வரும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கேட்டுக்கொண்டுள்ளேன்.
ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவின்படி, திரைப்படத்தினை தணிக்கை செய்தாலும் டெல்லியில் உள்ள குழுவினர் மீண்டும் அந்த படத்தினை தடை செய்யலாம். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படத்தினையும் தடை செய்ய உரிமை உள்ளது. இதனால் திரைத்துறையினருக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது’என்றார்.
முன்னணி நடிகர்கள் கவனத்திற்கு...
முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர் இந்த மசோதா குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு,’அவர்கள் விண்வெளியிலா உள்ளார்கள். இந்த ஒளிப்பதிவு சட்ட திருத்த வரைவு விவாதம் வரும் 19ஆம் தேதி மக்களவையில் நடைபெறும். அப்போது மக்களவை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் மசோதா நிறைவேற்ற முடியாமல் போகும்.
அதற்கு திரைத்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்கள் ஒன்றிணைந்து, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களவை உறுப்பினர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்றால் மட்டுமே தடுக்க முடியும்’என இயக்குநர் தங்கர் பச்சான் பதிலளித்தார்.