சென்னை: எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் திறமை ஒன்றை மட்டும் வைத்து வெள்ளித் திரையில் கதாநாயகனாக ஜோலிக்க முடியுமா.? என்ற பலரின் கேள்விக்கான ஒரே பதில் சிவாகார்த்திகேயன். இன்றைய மிடில் கிளாஸ் இளைஞர்களின் கனவு நாயகன். கனவு நாயகன் என்றால் சும்மா திரையில் பார்த்து மட்டும் கொண்டாடாமல் விடாமுயற்சியுடன் உழைத்தால் நீங்களும் ஹீரோதான் என்று உணர்த்திய ஒரு பெயர்.
திரை உலகில் வாரிசு ஆதிக்கம் ஓங்கிய காலத்தில், போட்டிகளும் ஏமாற்றங்களும் நிறைந்த இந்த சினிமா உலகில் ஒரு மிடில் கிளாஸ் பையனாக உள்ளே நுழைந்து, தனது திறமையை மட்டும் முதலீடு செய்து, இன்று விருட்சமாக வளர்ந்து சாதித்துக் காட்டியவர்தான் இந்த SK எனும் சிவகார்த்திகேயன்.
நீ பெரும் கலைஞன்: சின்னத்திரையில் 'கலக்க போவது யாரு?' நிகழ்ச்சியில் போட்டியாளராக தனது பயணத்தைத் தொடங்கினார். ‘முதல் டைட்டில் வின்னர்’ பட்டத்தை பெற்றார். இப்படி தொடங்கியது தான் இவரது பயணம். பின்னர் துணை நடிகர், காமெடி நடிகர், கதாநாயகன், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கோலிவுட் சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பிடித்து தவிர்க்க முடியாத கலைஞனாக மாறி தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வளம் வருகிறார் சிவாகார்த்திகேயன்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காமெடி செய்துகொண்டிருந்தார். பின்னர் அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறி தனது நகைச்சுவை பேச்சு மூலம் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றார். ஒரு டிவி தொகுப்பாளருக்கு இத்தகைய உயிருக்கு உயிரான ரசிகர்கள் உருவானது சிவகார்த்திகேயனுக்கு மட்டும்தான் என்பது நிதர்சனமான உண்மை. அதனை தொடர்ந்து நடன நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கேயும் தனது முத்திரையை பதித்தார்.
இவரது திறமையை பார்த்த நடிகர் தனுஷ் சிவகார்த்திகேயனை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார். தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தான் நடித்த 3 திரைப்படத்தில் தனது நண்பன் கதாபாத்திரம் கொடுத்து அழகு பார்த்தார். முதல் படத்திலேயே தனுஷுக்கு இணையான விசில் சத்தம் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்ததை கண்டு தனுஷே கொஞ்சம் ஆடித்தான் போனார். காரணம் சின்னத்திரையில் இருக்கும்போது சிவகார்த்திகேயன் சம்பாதித்து வைத்திருந்த குடும்பத்து ரசிகர்கள்.
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் ஆகியிருந்தனர் அப்போது. அதனை தொடர்ந்து 2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார். அதில் ஒரு சிறிய வேடம் தான் அவருக்கு. மெரினா, மூனு போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் தன்னை தனியே கவனிக்க வைத்தார்.
SK மாஸ் எண்ட்ரி: வெள்ளித்திரையில் மார்க்கெட் குறைந்தால் சின்னதிரை பக்கம் நடையைக் கட்டும் வழக்கத்தை மாற்றி சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரைக்கு மாஸ் எண்ட்ரி கொடுத்தார். தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியவர். தன் இயல்பான நடிப்பாலும், யதார்த்த பேச்சினாலும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார் சிவகார்த்திகேயன். ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னணி கதாநாயகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
அந்த சமயத்தில் இயக்குனர் வெற்றிமாறனை அழைத்த தனுஷ் ‘ஒரு நல்ல காமெடி கதை இருந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்டுள்ளார். இதற்கு வெற்றிமாறன் ‘என்ன தனுஷ், நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு, இப்போ எதுக்கு உங்களுக்கு காமெடி கதை’ என்று கேட்டார். அதற்கு தனுஷ் ‘எனக்கில்லை, சிவகார்த்திகேயனுக்கு, இந்த பையன் பெரிய ஹீரோவாக வருவதற்கான எல்லா தகுதியும் இருக்கு’ என்று கூறியுள்ளார்.
அப்படி வந்தவர் தான் துரை செந்தில்குமார். அந்த படம் தான் எதிர்நீச்சல். மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என ஏறுமுகத்தில் இருந்தது இவரது சினிமா வாழ்க்கை. இதில் சிவா - சூரி காம்போ ரசிகர்களை ஈர்த்தது. குறிப்பாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தமிழக பட்டிதொட்டியெங்கும் கிளை பரப்பியது. காமெடி, எமோஷனல், டான்ஸ் என ஹிட் கொடுத்து வந்தார்.
வீரனுக்கு சகஜம்: எல்லாத் துறைகளிலும் வெற்றி தோல்வி சகஜம். மிகப் பெரிய மக்கள் பரப்பைக் கவர வேண்டிய தேவை இருக்கும் திரையுலகிலோ தோல்விகள் தவிர்க்கவே முடியாத நிதர்சனம். அதற்கேற்ப சிவகார்த்திகேயனுக்கும் அடுத்தடுத்த ஒரு சில தோல்விப் படங்கள் அமைந்தன. அந்த தோல்விகள் பலருக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது. காரணம் சிவகார்த்திகேயன் ஹீரோவானது கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். அதனால் பலரும், சிவகார்த்திகேயனுக்கு சினிமாவில் வாழ்க்கை கொஞ்ச வருடங்கள்தான். சில வருடங்களில் அவரே காணாமல் போய்விடுவார் என்றெல்லாம் ஆரூடம் சொன்னார்கள்.
ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவ்வப்போது தடுமாறினாலும் தடம் மாறாமல் தனது பயணத்தில் மட்டுமே கவனம் செலுத்தி சினிமாவுக்கு அடிப்படையான நடனம், சண்டைகள் என அனைத்திலும் கற்றுத் தேர்ந்தார். இப்போது கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராகவும், 100 கோடி ரூபாய் வசூலிக்கும் ஹீரோவாகவும் இருக்கிறார். அவரின் ரசிகர்கள் எண்ணிக்கையும் அவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பும் ஒரு போதும் குறைந்துவிடவில்லை என்பதே உண்மை.
குறிப்பாக ரெமோ படத்தில் தனது முழு திறமையையும் வெளிக்கொணர்ந்தார். இதையடுத்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இவரது காம்போ எமோஷனல் ரூபமாக இருந்தது. ஒரு அண்ணன் தங்கையின் உன்னதமான உறவை அவ்வளவு ஆழமாக எடுத்துரைத்தது. பாடம் பார்த்து வெளிவந்த ரசிகர்கள் கண் கலங்கியவாறு சென்றது நான் அறிந்த ஒன்று.
அசுர வளர்ச்சி: பின்னர் தனது இயல்பை முற்றிலும் மாற்றி மாஸ், கிளாஸ் அவதாரம் எடுத்த படம் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர். ரசிகர்களை மிரள வைத்தது SK - வினய் காம்போ. காமெடி, எமோஷனல், டான்ஸ் எனப் பல விதத்திலும் அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்தபிறகு தனது நண்பர்களுக்கு வாய்ப்பளிக்க தொடங்கினார். அதற்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா படத்தை தயாரித்தார். இப்படி தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் உதவி செய்து நல்ல மனிதன் என்ற பெயரையும் எடுத்தார்.
நடிகர் மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மையோடு தமிழ் சினிமாவின் சிகரத்தில் அமர்ந்துள்ளார். ஒரு மிடில் கிளாஸ் நபராக உள்ளே வந்து மிகப் பெரிய இடத்தை பிடித்திருப்பதால் எப்போது இவனது சிம்மாசனம் ஆட்டம் காணும் என்று காத்திருப்பவர்கள் ஏராளம் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் தனது அடுத்தடுத்த வெற்றிகளின் மூலம் பதிலடி கொடுத்துக்கொண்டே வருகிறார். தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் மார்க்கெட் கொண்ட சில நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயனும் ஒருவர். கடந்த பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்துள்ள தமிழ் சினிமாவின் பிரின்ஸ் சிவகார்த்திகேயன். இவர் இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துகள்.
இதையும் படிங்க: Vaathi: தனுஷின் 'வாத்தி' திரைப்படம் வெளியானது!