சென்னை: சென்னையில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சம உரிமை மற்றும் சமூக நீதிக்கு சனாதன தர்மம் எதிரானது. எனவே, அதனை எதிர்த்தால் மட்டும் போதாது, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும். மேலும், டெங்கு, கரோனா போன்றவற்றை ஒழித்துக்கட்ட முயற்சிப்பது போன்றுதான் சனாதன தர்மமும்” என கூறி இருந்தார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பிற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, ஒய்வு பெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் என பலர் கடிதம் எழுதி உள்ளனர்.
இதையும் படிங்க: ஆவடியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 2 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!
அதேநேரம், உதயநிதியின் பேச்சுக்கு ஒரு தரப்பினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து உள்ளனர். அரசியல் அமைப்புகள் மட்டுமின்றி திரைப்பட இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற பிரபலங்களும் உதயநிதியின் கருத்துக்கு வரவேற்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நடிகர் சத்யராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “அமைச்சர் உதயநிதி மிகவும் தெளிவாக பேசியிருக்கிறார். அவருடைய சிந்தனை தெளிவாக உள்ளது. அவரின் கருத்தியல் ரீதியான தெளிவும், துணிச்சலும், ஒவ்வொரு விஷயத்தையும் கையாள்கிற விதத்தை பார்க்கும் பொழுதும் எனக்கு பெருமையாக உள்ளது. அவருக்கு எனது பாராட்டுக்கள்” என்றார்.
இதையும் படிங்க: "ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்" - UGC முன்னாள் துணை தலைவர் சிறப்பு பேட்டி!