சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் டிச.28ஆம் தேதி காலையில் உயிரிழந்தார். இந்த செய்தி தமிழ்நாட்டு மக்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரையும் உலுக்கியது. இதனால் நாடே சோகத்தில் மூழ்கியது.
இதனைத்தொடர்ந்து, நேற்று (டிச.29) காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கேப்டன் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அப்போது நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் பார்த்திபன், "இது ஒரு ரியல் ஹீரோவின் மரணம். ரியல் ஹீரோக்கள் எப்போது மரணிப்பதே கிடையாது. அவர்கள் தாங்கள் செய்த பணிகள் மூலம், நம் இதயங்களுக்குள் அவரை அடக்கம் செய்யப் போகிறோம். உண்மையாக விஜயகாந்த் சினிமாவில் நடிக்க வேண்டும் எனதான் ஆசைப்பட்டு வந்திருப்பார்.
ஆனால், அவர் பெரிய நடிகரான பின்னால் செய்ய வேண்டிய உதவிகள் எல்லாவற்றையும், ஆரம்ப காலகட்டத்தில், அதாவது ரோகினி லாட்ஜில் இருக்கும்போதே நிறைய செய்தார். என்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே, நான் என்றுமே ஒரு நடிகனுக்கு ரசிகனாக இருந்தது இல்லை. ஆனால், ஒரு சிறந்த மனிதனுக்கு ரசிகன் என்றால், அது விஜயகாந்துக்குதான். அதுமாதிரி தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் மனித நேயத்துடனும், உலகத்தில் உள்ள அனைத்து மாவீரனுக்கு இருக்கும் அவ்வளவு தைரியமும் விஜயகாந்திடம் இருந்தது என்பது ஆச்சரியம்.
எல்லாருக்கும் தெரியும், அவர் அரசியலில் நுழைந்த போதே அவருடைய செயல்பாடுகள் அனைத்தும். ரஜினிகாந்த் கூட தெரிவித்தார், அவர் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பார் என்று. அனைத்துக்கும் காரணம், அவரது மனதில் நாம் ஏற்படுத்திய பாதிப்பு. குறிப்பாக, மீடியாவிடம் நான் கேட்கும் ஒன்று என்னவென்றால், சில யூடியூப்களில் விஜயகாந்த் இறந்ததாக அவரது மரண செய்தியை நிறைய முறை வெளியிட்டுள்ளன. ஏன் என்னைப் பற்றி கூட வெளியிட்டுள்ளனர்.
தயவு செய்து இது மனிதாபிமானத்துடன் அணுக வேண்டிய ஒரு விஷயம். இந்த நேரத்தில் அதை மனவருத்தத்துடன் தெரிவிக்கிறேன். அதேபோல, மீடியாவில் வெளியான விஜயகாந்துடைய பேச்சு, அவருக்கு மனப்பிரச்சனையை ஏற்படுத்தியது. அதுதான் அவருடைய உடல் நலக்குறைபாட்டிற்கு ஒரு காரணம். ஆகையால், எந்த கலைஞனாக இருந்தாலும் அவர்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டுமென மீடியாவிடம் கேட்டுக்கொள்கிறேன். இது அட்வைஸ் கிடையாது; ஒரு சின்ன எதிர்பார்ப்பு' என வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் பேசிய அவர், 'விஜயகாந்த் மரணத்தின் மூலம் நான் தெரிந்து கொண்ட விஷயம், மனிதநேயத்துக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றிதான் இந்த கூட்டம். இந்த கூட்டத்தை காசு கொடுத்தெல்லாம் சேர்க்கவே முடியாது. சற்றுமுன் பிரேமலாதா விஜயகாந்தை பார்த்தபோது, என்னிடம் ஒரு தாயாக இருந்து பார்த்துக்கொண்டேன் எனக் கூறினீர்களே என அழுதார்கள். நானும் அழுதேன்.
உண்மையிலேயே மனைவியை மீறி ஒரு தாயாக மாறி, அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு போராட்டம் தான், இந்த சோகம் நமக்கு தாமதமாக வந்து சேர்ந்துள்ளது. விஜயகாந்துக்கு உண்மையாகவே நாம் அஞ்சலி செலுத்த வேண்டியதாக இருந்தால், அந்த மனிதநேயத்தை பின்பற்ற வேண்டும் என எனக்கு நானே ஒரு அட்வைஸ்ஸாக எடுத்துக்கொள்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் பேசினார்.
இதையும் படிங்க: விடைபெற்றார் விஜயகாந்த்.. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்!