சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் ஒருசிலர் மட்டுமே தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அவர்களில் முக்கியமான நடிகர் நவரச நாயகன் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டாலும் பிற்காலத்தில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர். இதுவே இவரது வெற்றிக்கு சான்று.
நடிகர் கார்த்திக் எல்லோரும் சொல்வது போல் நடிக்க வந்ததது ஒரு விபத்து என்பார். ஆம் இவரும் நடிக்க வந்தது ஒரு விபத்து தான். இயக்குனர் இமயம் பாரதிராஜா காரில் வந்து கொண்டிருந்தபோது எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக சிராய்த்துக் கொண்டான். உடனடியாக அவனை தன் காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாரதிராஜா மரத்தடியில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்தில் உள்ள வீட்டு போர்டிகோ பகுதியில், விளையாடிக் கொண்டிருந்த பையனைப் பார்த்தார். அடுத்தநாள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய ’அலைகள் ஓய்வதில்லை படத்துக்கு நாயகன் மட்டுமே கிடைக்கவில்லை, ஏங்கிகொண்டு இருந்த அவருக்கி கார்திக்கை பார்த்ததும் உற்சாகம் ஏற்பட்டது.
நடிகர் முத்துராமனின் மகன் என்று அறிந்ததும் உடனே பேசி, ஓகே செய்து, அடுத்தநாள் காலையில் முரளியை குமரி மாவட்டத்துக்கு ரயிலில் ஏற்றிக் கொண்டு போய்விட்டார். ஆம் கார்த்தியின் நிஜப் பெயர் முரளி. பாரதிராஜா அவரை கார்த்திக் என மாற்றினார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் தனது முதல் படம் என்றே தெரியாத வகையில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் கார்த்திக்.
அதன்பிறகு அடுத்தடுத்து எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் பொருந்திப்போனார் கார்த்திக். 80களில் தொடங்கிய கார்த்திகின் பயணத்தில், பல வெற்றி படங்கள் மற்றும் வெள்ளி விழா படங்கள் ஏராளம். இதற்கு முக்கிய காரணம் கார்த்திக்கின் நடை, பாவனை, ரியாக்ஷன். இவை அனைத்தும் தான் கார்த்திக்கை தனித்துவம் மிக்க நடிகராகவும் மகத்துவம் மிக்க கலைஞனாகவும் காட்டியது.
கார்த்தி உடன் இணைந்து நடித்த அத்தனை நடிகைகளுக்குமே இவருடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. அக்னி நட்சத்திரம், கிழக்கு வாசல், மௌன ராகம், வருஷம் 16, பொன்னுமணி, பூவரசன், மேட்டுக்குடி, கோகுலத்தில் சீதை, பிஸ்தா, சுயம்வரம் என கார்த்திக்கின் நடிப்பிற்கு சான்றாக உள்ள படங்கள்.
மௌன ராகம் படத்தில் சிறு காட்சிகளில் வந்து போனாலும், அந்த படத்தில் துறுதுறுவென இருந்த கார்த்திக்கிற்கு இன்றளவும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் கார்த்திக் என்னும் நடிகர் பதித்த முத்திரையை வேறு யாராலும் முறியடிக்கவே முடியாது. அன்றைய காலத்தில் ஏராளமான பெண் ரசிகைகள் இவருக்கு இருந்தனர். அப்போது இவரது ஹேர்ஸ்டைல் வைத்துக் கொண்டு சுற்றிய இளைஞர்கள் கூட்டம் ஏராளம்.
ஆரம்ப காலத்தில் காதல் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த கார்த்திக் அதன்பிறகு தனது திரை வாழ்வில் கொஞ்சம் சறுக்கலை சந்தித்தார். அதன்பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் கவுண்டமணி உடன் இவர் இணைந்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ’உள்ளத்தை அள்ளித்தா’ படம் இப்போது பார்த்தாலும் சலிக்காது.
அதன்பிறகு கேவி ஆனந்த் இயக்கிய அநேகன் படத்தில் கார்த்தி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார். நடிகராக மட்டுமின்றி அமரன் படத்தில் வெத்தல போட்ட சோக்குல என்ற பாடல் பாடி இருந்தார். அந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து சில பாடல்களையும் பாடினார். இவரது மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வருகிறார்.
துறுதுறு சிட்டி பாய், கிராமத்து இளைஞன், அப்பாவி, சீரியஸ் கேரக்டர், காமெடி ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடை, உடை, பாவனை, தோரணை என அனைத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தக்கூடிய அசாத்திய திறமை கொண்டவர் நடிகர் கார்த்திக் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவருக்கான இடம் இவருக்காக எப்போதும் இருக்கும்.
இதையும் படிங்க: விடாமுயற்சி படப்பிடிப்பு எப்போது? - வெளியான அறிவிப்பு!