சென்னை: தமிழ் சினிமாவின் 1980 காலக்கட்டத்தில் நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நடிகர் கங்கா. சென்னையில் உள்ள தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், நேற்று (நவ.10) திடீர் மாரடைப்பு ஏற்பட்டுக் காலமானார்.
தமிழில் டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான 'உயிருள்ளவரை உஷா' என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா. பிறகு, கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவர்.
குறிப்பாக, சில படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற கதாபாத்திரத்தை ஏற்றுத் தனது நடிப்புத் திறமையால், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கங்கா, பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போதுவரை 'உயிருள்ள வரை உஷா' படத்தில் இவரது நடிப்பில் வெளியான 'வைகை கரை காற்றே நில்லு'.. என்ற பாடல் பிரபலமாக உள்ளது.
தொலைக்காட்சி தொடர்களில் பிஸியான நடிகராக வலம் வந்த கங்கா, திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில், நடிப்பிலிருந்து விலகி, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த கங்கா, தனது சகோதரர் குடும்பத்துடன் மயிலாப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று (நவ.10) திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர். நடிகர் கங்காவின் இறுதிச் சடங்கு சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தில் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.