சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.26) உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வி துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கொள்கை விளக்கக் குறிப்பை வெளியிட்டார்.
அதில் “அனைத்து தரப்பினரிடமும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்த கையேடு ஒன்று தயாரித்து வழங்கப்படும். மாணவர்கள் புகார், கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.
நிரப்பப்பட உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள்
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை, அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2021-2022ஆம் கல்வி ஆண்டில் 2 ஆயிரத்து 98 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த கல்வி ஆண்டில் மலைப்பாங்கான, தொலைதூர பகுதிகளில் உள்ள 12 தொடக்கப் பள்ளிகள், புதிதாக தொடங்கப்பட்ட 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு 2021-2022 ஆம் ஆண்டிற்கு ரூ. 95.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்கத்திற்கு 2021-2022 ஆம் நிதி ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டத்தில் ரூ. 134.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் பள்ளி சாரா, வயது வந்தோர் கல்விக்கு 2021-22ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ், ரூ 9.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்படிப்புகளில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு மசோதா தாக்கல்