சென்னை: மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் போலி அமைப்புகள் உருவாகுவதை தடுப்பது குறித்து அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும், காவல் ஆய்வாளர்களுக்கும் தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் அதனை விசாரித்து முறைப்படி அரசுக்கு பரிந்துரை செய்யும் பணிகளில் தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் செயல்பட்டு வருகிறது.
ஆனால் சில தனியார் அமைப்புகள் மனித உரிமை என்ற பெயரை சேர்த்துக்கொண்டு தங்களை மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாக தமிழ்நாடு காவல் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந்தப் புகார் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, மனித உரிமைகள் என்ற பெயரை தனியார் அமைப்புகள் இணைக்க தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும் மனித உரிமைகள் என்ற பெயரை நீக்கிவிட்டு தனியார் அமைப்புகள் என்று பதிவிட வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இதனை மீறியும் சில தனியார் அமைப்புகள் மனித உரிமைகள் என்ற பெயரை இணைத்துக்கொண்டு பொதுமக்களை நம்பவைத்து போலியாக நிதி வசூல் செய்வது, உறுப்பினர் சேர்க்கை மற்றும் போலி அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் குவிகின்றன.
குறிப்பாக ஒரு மாவட்டத்தில் காவல்துறை அலுவலரே இது போன்ற பெயர்களை பயன்படுத்தி அமைப்புகள் திறந்து வைத்துள்ளார். மேலும் போலியாக மனித உரிமை என்ற பெயரில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றித் திரிவோர் மீதும், தனியார் அமைப்புகள் மனித உரிமைகள் என்ற பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுவோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொண்ட விவரங்களை உடனடியாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி