அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் சந்தித்துப் பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி. சண்முகம், "உள்ளாட்சித் தேர்தல் நடக்கக் கூடாது என்பதற்காக திமுக, அதன் கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
ஆனால், அதிமுக ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்டு வாரியாக பிரித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் தான் மத்திய அரசிடமிருந்து உள்ளாட்சிக்கு வரவேண்டிய தொகை வரும். இதனைக் கொண்டு வந்த பெருமை முதலமைச்சர், துணை முதலமைச்சரையே சாரும்.
அதிமுகவிற்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே திமுக தோல்வி பயத்தில் தான், இதனை சந்திக்கத் தயங்குகின்றனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் திமுக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற இடங்களில், அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
அதேபோன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக வாக்குகளைப் பெறுவோம். புதிய நீதிக் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து அதிமுக அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை செய்து, இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென எங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளோம் .
உள்ளாட்சித் தேர்தலில் புதிய நீதி கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவார்கள்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும் - சரத்குமார்