சென்னை: திருவல்லிக்கேணி அசூதி கான் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்( 50). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடந்த 2ஆம் தேதி இரவு, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையை சேர்ந்த மூன்று பெண்களை சவாரி ஏற்றிக்கொண்டு பல்லவன் சாலை அருகே உள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் சவாரிக்காக அந்த பகுதியிலேயே லோகேஷ் காத்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த இருவர் பணம் கேட்டு லோகேஷிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது பணம் தர மறுத்ததால் அவர்கள் வைத்திருந்த கத்தி மற்றும் கட்டையால் லோகேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த லோகேஷை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக லோகேஷ் அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து லோகேஷை தாக்கி இருவரை நேற்று (செப் 3) கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், இவர்கள் திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த தீனா 20 மற்றும் மணிகண்டன் 18 என்பதும், ஏற்கனவே இவர்கள் மீது மயிலாப்பூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 3.30 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்த கைதி மணிகண்டன் திடீரென கைவிலங்கை கழற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார். காவலர்கள் துரத்திய போதும் வேகமாக தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தப்பியோடிய மண்கண்டனை காவல்ர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி