சமூக வலைதளத்தில் நாகராஜன் சந்திரசேகரன் என்ற நபர் ஆவின் பால் பூத் நடத்த அரசு அனுமதி பெற்று தருவதாகவும், அதற்கு ஊனமுற்றோர் 2லட்சம் ரூபாயும், மற்றவர்கள் 3லட்ச ரூபாயும் கொடுத்தால் போதும் என்றும் மேலும் விவரங்கள் அறிய வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவதற்கான இணைப்பையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை நம்பிய சிலர், ஆவின் மில்க் பூத் ஹோம் என்ற வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்த போது, அவர் தனக்கு அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதாகவும், முன்பணமாக 16,500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் ஆடியோவில் பதிவிட்டதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.
மேலும், இதனை தடுத்து நிறுத்தவும், இந்த மோசடியில் தொடர்புடைய நபரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் சார்பில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.