சென்னை: மெரினா கடற்கரை காமராஜர் சாலை, கண்ணகி சிலை அருகே நடைபாதையில் பெண் ஒருவர் இரண்டு கைக்குழந்தைகளுடன் கேட்பாரற்று நீண்ட நேரமாக மயக்க நிலையில் இருப்பதாக, பொதுமக்கள் சிலர் மெரினா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் அங்குச் சென்ற போலீசார் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை எழுப்ப முயற்சித்தனர். அப்போது அந்த பெண் சுயநினைவின்றி மது போதையில் இருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போதை மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணின் அருகே 6 மாதமே ஆன ஒரு ஆண் கைக்குழந்தையும், 2 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை ஒன்று பசி மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தன.
அப்போது உறங்கிக் கொண்டிருந்த அந்த கை குழந்தையை உற்று கவனித்த பொழுது அந்த குழந்தையின் அருகே தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இச்சம்பவத்தின் போது அவ்வழியாக வந்த திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான முஹம்மத் ஜின்னா, பசியில் அழுது கொண்டிருந்த அந்த குழந்தைக்கு அங்கிருந்தவர்களின் உதவியுடன் தண்ணீர் மற்றும் பால் வாங்கிக் கொடுத்தார்.
பின்னர் 108 ஆம்புலன் மூலம் போதை மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணையும், இரு குழந்தைகளையும் மீட்டு முதலுதவிக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சேர்த்தார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அந்தப் பெண் யார் என்பது குறித்தும், இரு குழந்தைகளும் அவருடையதுதானா என்று விசாரணை செய்த பிறகு அந்த பெண் மற்றும் இரு குழந்தைகளை அரசு உதவியுடன் காப்பகத்தில் சேர்க்கப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களிடம் கத்தி முனையில் கொள்ளை.. கோவை பரபரப்பு சம்பவம்!