சென்னை: நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை துணை தூதரகத்தின் முன் இன்று (ஜன.29) காலை 6.45 மணியளவில் திடீரென ஒரு நபர் 'என்னை இலங்கைக்கு அனுப்பிவையுங்கள் , இல்லையென்றால் இந்திய குடியுரிமை வழங்குங்கள்' என கூறி ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து இலங்கை துணை தூதரகத்தின் அலுவலர்கள் அந்த நபர் குறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஜாய் (37) என்பதும், தற்போது ராமநாதபுரம் மண்டபத்தில் வசித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் ஜாய் கடந்த 1991ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த உள்நாட்டு போரின் போது தப்பி கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். தமிழ்நாட்டில் பல இடங்களில் சுற்றி திரிந்து வந்ததாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி இதேபோல் இலங்கை செல்ல வேண்டும் எனக் கூறி சென்னைக்கு வந்தபோது அலுவலர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் இன்று(ஜன.29) மறுபடியும் அவர், இலங்கை துணை தூதரகத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. நுங்கம்பாக்கம் காவல்துறையினர் ஜாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை ஜாதி ரீதியான கலவரம்:கள ஆய்வு வெளியீடு