சென்னை திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள முள்புதரில் அதே பகுதியைச் சேர்ந்த அஜித் (எ) அஜித்குமார் (23) என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து திருவேற்காடு காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பிவைத்து கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை செய்துவந்தனர்.
இதையடுத்து திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த லால் (என்ற) பிரகாஷ் (24), ஆகாஷ் (22), குணசேகரன் (20), காத்தவராயன் (27) ஆகிய நான்கு பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்தப் பகுதியில் யார் பெரிய ஆள் என்பதிலும் கஞ்சா விற்பனை செய்வதிலும் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அஜித்குமார் சம்பவ இடத்தில் மது அருந்தி கொண்டிருந்தபோது செல்போனில் தொடர்புகொண்ட லால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தனது கூட்டாளிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்றபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த லாலுவும், அவரது கூட்டாளிகளும் மறைத்துவைத்திருந்த கத்தியால் அஜித்குமாரைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.