சென்னை: தமிழ்நாட்டில் விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் தங்கம், வெளிநாட்டு பணம் உள்ளிட்டவற்றை கடத்துவது தொடர் கதையாகவே நிகழ்ந்து வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகளும் நாள்தோறும் கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் மீண்டும் கடத்தல் நடக்கிறது. அந்த வகையில், துபாயிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (பிப்.28) வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த 34 வயது ஆண் பயணி ஒருவர், தன்னிடம் சுங்கத் தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியில் சென்றார்.
ஆனாலும், அந்த பயணியின் பேச்சில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், அவரை மீண்டும் உள்ளே வரவழைத்து உடைமைகளை சோதனை இட்டனர். உடைமைகளில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அந்த பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை இட்டனர். அப்போது அவருடைய முதுகில் மூன்று சிறிய தங்க கட்டிகளை டேப் போட்டு ஒட்டி நூதனமாக வைத்திருந்தது தெரியவந்தது. அதைக் கண்ட சுங்க அதிகாரிகள் அந்த தங்கத்தை கைப்பற்றி பரிசோதித்தனர்.
அப்போது அதில் சுமார் 705 கிராம் தங்கம் இருந்தது. அதாவது அதன் சர்வதேச மதிப்பு ரூ.35.38 லட்சமாகும். இதையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து, பின்னர் கடத்தல் பயணி கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆண்டிற்கு 2,3 முறை பிறந்தநாள் வரக்கூடாதா என ஏங்கியுள்ளேன் - முதலமைச்சர் ஸ்டாலின்