சென்னை: வேலூர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் கடந்த சில தினங்களாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (நவ.6) மாலை மது போதையில் இருந்த கார்த்திக், அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்று சிகரெட் வாங்கி விட்டு, அதற்கு பணம் தர மறுத்துள்ளார். மேலும், பணம் கேட்ட கடைக்காரரை கத்தியைக் காட்டி மிரட்டியும் மாமுல் கேட்டு உள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து கடைக்காரர் இந்த சம்பவம் குறித்து சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லிவாக்கம் காவல்துறையினர், மது போதையில் இருந்த கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கார்த்திக் மறைத்து வைத்திருந்த சிறிய அளவிலான கத்தி ஒன்றினை பறிமுதல் செய்த வில்லிவாக்கம் போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தொடர்ந்து தன்னை துன்புறுத்தினால் தனது வீட்டில் வெடி குண்டு இருப்பதாகவும், அதனை காவல் நிலையம் மீது வீசி விடுவேன் எனவும் காவல் அதிகாரிகளை கார்த்திக் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வில்லிவாக்கம் காவல்துறையினர், கார்த்திக் சொல்வது உண்மைதானா அல்லது மது போதையில் உளறுகிறாரா என்பதை உறுதி செய்வதற்கு கார்த்திக்கை அழைத்துக் கொண்டு, அவர் வசிக்கும் இல்லத்திற்குச் சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த டிபன் பாக்ஸில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டெடுத்துள்ளனர். பின்னர், உடனடியாக இது குறித்து வில்லிவாக்கம் காவல்துறையினர், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், கார்த்திக்கை கைது செய்த வில்லிவாக்கம் காவல்துறையினர், அவர் மீது சமூக பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், வெடிகுண்டு தயாரித்தல், சட்ட விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தற்போது வில்லிவாக்கம் பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆவடியில் விசாரணைக்குச் சென்ற காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் கைது!