சென்னை விமான நிலையம் வளாகத்திற்குள் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பணிமனை உள்ளது. அங்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானங்கள் பழுது பார்ப்பது மற்றும் சர்வீஸ் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அதோடு அங்கு வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான பெட்ரோல், டீசல் பங்க் உள்ளன. இந்த நிலையில் ஏர் இந்தியா பணிமனைக்கு வந்த ஒரு மாருதி வேன் கார் நிலை தடுமாறி அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்புகள் மீது வேகமாக மோதியது.
மோதிய வேகத்தில் காரின் பெட்ரோல் டேங்க் உடைந்து கொட்டியதால் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கார் எரியும் இடம் அருகிலே பெட்ரோல், டீசல் பம்புகளும் உள்ளதால் ஏர் இந்தியா ஊழியர்கள் பதட்டம் அடைந்தனர்.
உடனடியாக ஏர் இந்தியா ஒர்க் ஷாப் ஊழியர்கள் சென்னை விமான நிலையம் தீயணைப்பு துறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தனர். அதன்படி அங்கு இரண்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைக்கப்பட்டது. ஆனாலும் மாருதி வேன் கார் முழுவதுமாக தீயில் எரிந்து நாசமாகியது.
ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் உடனடியாக எடுத்த நடவடிக்கையால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்திற்கு உள்ளான கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலையம் அதிகாரிகள் மற்றும் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையம் போலீசாரும் விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க:குறைந்த கட்டணத்தில் தென் மாநிலங்களுக்கு சுற்றுலா ரயில் - ஐஆர்சிடிசி!