சென்னை: சட்டப்பேரவையில், கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ' ''மாபெரும் சபையினில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்'' என்று போதித்த எங்களது போதி தர்மர் எம்.ஜி.ஆர் இருக்கும் திசையினை நோக்கி வணங்குகிறேன்'' எனக் கூறினார்.
மேலும், ''கன்றின் குரலும், கன்னி தமிழும், சொல்லும் வார்த்தை அம்மா அம்மா.. கருணை தேடி அலையும் உயிர்கள் உருகும் வார்த்தை அம்மா அம்மா.. எந்த மனமோ பாசம் உண்டோ அந்த மனமே அம்மா அம்மா'' என பாடல் பாடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வணங்குகிறேன் என கூறினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.மூக்கையாத் தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பிறந்த ஊரான பாப்பாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, அவரது பெயரை சூட்ட வேண்டும் எனவும்; பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு மதுரையில் அல்லது சென்னையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''அம்மா மருந்தகங்கள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், தற்பொழுது அந்த மருந்தகங்கள் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 3501 நகரும் நியாய விலை கடைகளை தொடங்கி வைத்தார்.
அந்த கடைகளின் செயல்பாட்டிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது, எனவே இதனை மேம்படுத்த வேண்டும்’ எனக் கூறினார்.
மேலும், ''ஜெயலலிதா ஆட்சியில் ரூ.12,500/- கோடி பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தில் மேற்கண்ட எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் அரசாணை வெளியிடப்பட்டு 1 மாத காலத்தில் பயனாளிகளுக்குச் சான்று வழங்கப்பட்டது. முறையாக ஒவ்வொரு கூட்டுறவு நிறுவனங்களும், கணினி மூலம் தகவல் பரிமாற்றப்பட்டது என்பதை பெருமையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
நகைக்கடனை தள்ளுபடி செய்வதாக கூறி, கூவிக் கூவி அழைத்து நகைகளை அடகு வைக்க வைத்தார்கள். அதன் பிறகு, சிலருக்கு மட்டுமே தள்ளுபடி என்கிறார்கள். எங்கள் ஆட்சியில் அனைத்தையும் அனைவருக்கும் கொடுத்தோம் என்றும், மேலும் 11 லட்சம் என்ற பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் அவர்,“தமிழ் நாட்டில் இப்பொழுது ஒரு சினிமா வருகிறது அது என்னன்னா, ஓட்டு கேட்க வந்தாங்களே சின்னாத்தா...
இப்ப ஒருத்தரையும் காணலையே என்னாத்தா...
ஜெயித்து வந்ததுமே செல்லாத்தா..
ஊர சிங்கப்பூரா மாத்துவேன்னு சொன்னாத்தா..
விடியல் தரப்போராருன்னு சொன்னாங்களே சின்னாத்தா..
இப்ப விடியாமே போயிட்டு இருக்கே செல்லாத்தா” என பாடல் பாடினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர், ''இப்ப மக்கள் என்ன சொல்லுறாங்க தெரியுமா? கண்டா வரச்சொல்லுங்க, அவர கையோடு கூட்டி வாருங்க’’ என கர்ணன் திரைப்பட பாடலைப் பாடி எனக்கு பேச வாய்ப்பளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தென்காசியிலிருந்து கேரளாவிற்கு கனிம வளக் கடத்தல் - கண்காணிக்க சிறப்பு தனிப்படை அமைப்பு!