சென்னை: குடிநீர், அன்றாடத் தேவைகளுக்கு மட்டுமன்றி வணிக தேவைகளுக்கும் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதால் அதன் அளவு மிக வேகமாகக் குறையும். கடந்த வடகிழக்குப் பருவமழையால் பூமி குளிர்ந்ததோடு சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு சென்னைவாசிகளை ஆசுவாசப்படுத்தும் அதே வேளையில், தனியார் தண்ணீர் லாரிகள் சென்னை புறநகரில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீரை உறிஞ்சுவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த விதிமீறலைக் கட்டுப்படுத்த பொதுப்பணித் துறை எந்த ஒரு கண்காணிப்புக் குழுவையும் இதுவரை அமைக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
நிலத்தடி நீரை சூறையாடும் தனியார் நிறுவனங்கள்
சென்னை, புறநகர்ப் பகுதிகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஏறக்குறைய 10 ஆயிரம் லாரிகள் கிட்டத்தட்ட 25 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக உள்ளன. இதர லாரிகள் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாக இருக்கின்றன. இந்த லாரிகள் வேளாண்மை, தனியார் ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சுகின்றன.
கோடைக்காலம் தண்ணீரின் தேவை அதிகரித்ததை அடுத்து, லாரிகளின் இயக்கம் முன்பைவிட துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், உணவகங்கள், சென்னை மற்றும் புறநகரில் வசிக்கும் மக்களுக்கு அதிகளவில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. குறிப்பாக, அம்பத்தூர், தாம்பரம், பூந்தமல்லி, தாமரைப்பாக்கம், திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இந்தத் தனியார் லாரிகள் அனுமதியின்றி தண்ணீரை எடுத்து, அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றன.
யுக்தி: சென்னையின் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள உழவர்களிடம் பேரம்போடும் லாரிகளின் உரிமையாளர்கள், குறைந்த விலை கொடுத்து தண்ணீரை எடுத்து அதிக விலைக்கு விநியோகம் செய்கின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது. சுமார் 15 ஆயிரம் லிட்டர் ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுக்க குறைந்தபட்சமாக 800 லிருந்து 900 ரூபாய் கொடுக்கின்றனர். ஆனால் அதே 15 ஆயிரம் லிட்டரை நகரத்திற்குள் கொண்டுவந்து சுமார் இரண்டாயிரத்து 500 ரூபாய்க்கு விற்பதாகக் கூறப்படுகிறது.
கள நிலவரம்
பூமியில் சேகரமாகும் நிலத்தடி நீரை சுயலாபத்திற்காகச் சூறையாடுவதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறை அலுவலரிடம் கேட்டோம். ’வட கிழக்குப் பருவமழை சார்ந்து ஒரு ஆய்வுசெய்ய தொடங்கியிருக்கிறோம். அதில் நிலத்தடி நீர்மட்டம் கணக்கிடப்படும்.
தனியார் லாரிகள் நிலத்தடி நீரை எடுப்பதாகப் பொதுப்பணித் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சட்டவிரோதப்போக்கைக் கண்காணிக்க ஒரு குழுவை அமைத்துள்ளோம். சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு வரும்போதெல்லாம், அதிக அளவிலான லாரிகள் போட்டிப் போட்டு நிலத்தடி நீரை அபகரித்து விற்கும்’ என்றார்.
மற்றொரு அலுவலர் பேசும்போது, ’சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தின் மூலம் இயக்கப்படும் ஒப்பந்த லாரிகளுக்கு நிலத்தடி நீரை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீரின் கொள்ளளவு நன்றாக உள்ளதால், நிலத்தடி நீரை எடுக்க வாய்ப்பில்லை.
ஒருவேளை முறையான உரிமம் பெறாத தனியார் லாரிகள் தண்ணீர் எடுப்பது கண்டறியப்படுமானால் உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனப் பேசி முடித்தார்.
நிலத்தடி நீரை எடுக்க வழிகாட்டுமுறைகள்?
லாரிகளின் உரிமையாளர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களைச் சந்தித்து விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்திசெய்து சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ந்து, பொதுப்பணித் துறை (நிலத்தடி நீர்) அலுவலர்கள் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்டுள்ள இடங்களை ஆய்வுசெய்வார்கள்.
இதற்குப் பிறகுதான் லாரிகளின் உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். மாவட்ட வாரியான தண்ணீர் உபயோகிப்புக் குழுவும் இதற்கான உரிமத்தைக் கொடுக்கும். உரிமம் உள்ள லாரி உரிமையாளர்கள்தான் நிலத்தடி நீரை எடுக்க வேண்டும்.
மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் உறுப்பினரும், நிலத்தடி நீர் ஆய்வாளருமான ஜா. சரவணன் நம்மிடம் கூறுகையில், "தனியார் தண்ணீர் லாரிகள் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் விநியோகம் செய்கிறது. குறிப்பாக சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தண்ணீர் விற்பனை எப்போதும் அமோகமாக இருக்கும். இது அவசியமானது என்றாலும், லாரிகள் நிலத்தடி நீரைச் சரியாக உரிமம் பெற்று எடுக்க வேண்டும்.
2018ஆம் ஆண்டு இந்த லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், சென்னை ஓஎம்ஆரில் உள்ள நிறைய தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன. அப்போதுதான் தனியார் லாரிகளின் இருப்புப் பெருமளவில் பேசப்பட்டது. சென்னையைப் பொறுத்தவரை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும்’ என்றார்.
பெருமளவில் மக்கள் குடியேறியுள்ள சென்னை போன்ற நகரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகளவில் இருக்கும். இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலைகளில் நிலத்தடி நீர் மிகச் சிறந்த வரப்பிரசாதம் என்கிறார், சென்னை மழைநீர் சேகரிப்பு அமைப்பின் தலைவர் சேகர் ராகவன்.
தற்போதைய காலகட்டத்தில் பெருகிவரும் மக்கள்தொகை, வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளில் நீரின் தேவை அதிகரித்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் நகரமயமாதல் ஆகியவற்றால் நிலத்தடி நீர் குறைந்துவருகிறது. அதைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அரசின் கடமை மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும்கூட.