சென்னை: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.
அரசின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. பொதுமக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக் கொள்கின்றனர்.
தடுப்பூசிகள் வருகை
இந்நிலையில் இன்று (ஆக.12) புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 65 பார்சல்களில் 7 லட்சத்து 66 ஆயிரத்து 800 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன.
அதேபோல் ஹைதராபாத்திலிருந்து 12 பார்சல்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 360 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்தடைந்தன. இந்தத் தடுப்பூசிகளை மாநில சுகாதாரத்துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன