சென்னை: நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் மேற்பார்வையில், சென்னை ரயில்வே கோட்ட பாதுகாப்புபடையின் மூத்த துணை ஆணையர் செந்தில் குமரேசன் தலைமையில் ரயில்வே பாதுகாப்புப் படையினர், ரயில்வே காவலர்கள் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் இன்று (ஆக.14) சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பயணிகள் கொண்டு வரக்கூடிய உடைமைகள், பார்சல்கள் ஆகியவை முழுவதுமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது.
முக்கிய இடங்களில் சோதனை
சோதனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், "சுதந்திர தினத்தையொட்டி சென்னை ரயில்வே இருப்புப்பாதை எல்லைக்குள்பட்ட ரயில் நிலையங்களில் டி.எஸ்.பி தலைமையில் 725 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்வே காவலர்களுடன் இணைந்து 150 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல முக்கிய ரயில் நிலையங்கள், மேம்பாலங்கள், தண்டவாளங்கள் ஆகிய இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறை... இன்று தாக்கல் செய்யப்படுகிறது வேளாண் பட்ஜெட்!