சென்னை: இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரின் காரணமாக ஏராளமான ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இலங்கை நாட்டில் இருந்து வரக்கூடிய அகதிகளுக்காக தமிழ்நாட்டில் 109 அகதிகள் முகாம்கள் உள்ளன. அவற்றில், அவர்கள் தங்க வைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் இந்திய அரசால் செய்து கொடுக்கப்பட்டுவருகிறது. தற்போதைய நிலவரப்படி 109 முகாம்களில் 65ஆயிரம் அகதிகள் உள்ளனர்.
தென்மாவட்டங்களில் உள்ள முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகள் 64 பேர் கடந்த செப்டம்பர் மாதம், முதல் வாரத்தில் கேரளா சென்று சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்திய பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கியதாகவும், அந்தப்படகின் மூலமாக இலங்கை கடற்பரப்பில் சென்று அங்கு மேலும் 20 இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் 84 அகதிகள் இலங்கை கடற்பரப்பில் இருந்து மாலத்தீவு வழியாக தென்னாப்பிரிக்கா சென்று இறுதியாக கனடா சென்று தஞ்சமடைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலத்தீவு, மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையேயான கடற்பரப்பில் இவர்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக சிக்கிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான தகவலோ அள்லது இவர்களை கைது செய்ததாகவோ மாலத்தீவு தரப்பில் இருந்து தெளிவாக பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்க படையிடம் சிக்கியுள்ளார்களா?
அதேநேரத்தில் மாலத்தீவு அருகேயுள்ள டிக்கோ கார்சியா என்ற தீவு அமெரிக்காவின் கைவசம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவர்கள் படகு நுழைந்ததாக கூறி அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதுவரை அமெரிக்க தரப்பில் இருந்தோ அல்லது இந்திய தூதரகத்துக்கோ இது தொடர்பான எவ்வித தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் இருந்த சட்டவிரோதமாக 64 அகதிகள் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்றதாக வந்த தகவலையடுத்து க்யூ பிராஞ்ச் காவலர்கள் தென் மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தீவிர சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், தற்போதுவரை இந்த 64 பேர் யார் என்பதை உளவுத்துறை காவலர்களால் உறுதி செய்யமுடியவில்லை.
அதேநேரத்தில் கடற்பரப்பில் சிக்கிக்கொண்டதாக கூறப்படும் 84 நபர்களின் விவரங்களைப் பெறுவதற்காக தமிழ்நாடு காவல்துறை இன்டர்போல் உதவியை நாடியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்: சொல்லில் ஏற்பட்ட மாற்றமல்ல - சிந்தனைச் செல்வன்!