அரசு வேலை வாங்கி தருவதாக 85 நபர்களிடம் சுமார் 4 கோடி ரூபாய் வரை பெற்று போலி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த புகாரில், தமிழ்நாடு முஸ்லீம் லீக் மாநில செயலாளர் ரேஷ்மா தாவூத், நந்தினி அவரது கணவர் அருண் ஆகிய 3 பேரை ஜூன் 30ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் ரேஷ்மா தாவூத் மீது ஏற்கெனவே 2016, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் மத்திய குற்றப்பிரிவு, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வேலைவாய்ப்பு மோசடி, குற்றம் கருதி மிரட்டல் ஆகிய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு மோசடி புகார்கள் குவிந்ததால் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரேஷ்மா தாவூத் மற்றும் நந்தினி இணைந்து 150க்கும் மேற்பட்ட வேலை தேடும் இளைஞர்களிடம் இருந்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 5 கோடி ரூபாய் வரை பெற்றிருந்தது தெரியவந்தது.
மேலும் இருவரின் வீடுகள், அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை செய்த போது போலி நியமன ஆணைகள், பணம் இழந்த பட்டதாரிகளின் பட்டியல், கணினி, கார், முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி யாராவது பணம் கேட்டால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனக் காவல் ஆணையர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'பொருளாதார குற்றவாளிகளை விரைவில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவோம்'