சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத்திட்டத்திற்காக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பக்கிங்ஹாம் கால்வாயில் உரிய அனுமதிகளைப்பெறாமல் சாலை அமைத்துள்ளதாகவும், கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
அதனுடன், கொசஸ்தலை ஆற்றின் நீர் போக்குவரத்தைத் தடுத்ததாகவும் கூறி, கட்டுமானப்பணிகளை தடுத்து நிறுத்தவும், கட்டடக்கழிவுகளை அகற்றி, அப்பகுதியை மீட்டெடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத்தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், நீதித்துறை உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், சுதிர் அகர்வால், நிபுணத்துவ உறுப்பினர்கள் சத்யகோபால், செந்தில்வேல் அடங்கிய சிறப்பு அமர்வு, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2017ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டு அளித்த அறிக்கையில், நதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள், நதியின் நீர் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அறிக்கை அளித்துள்ளதையும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியுள்ளதால் எண்ணூர் அனல் மின் நிலையம் இழப்பீடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
கொசஸ்தலை ஆற்றின் நீர் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தாலும், கடந்த காலங்களில் ஏற்படுத்திய சேதத்திற்கு இழப்பீடு செலுத்தியாக வேண்டும் என்பதால், இழப்பீட்டைத் தீர்மானிக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியர் அடங்கிய கூட்டுக்குழுவை நியமித்த தீர்ப்பாயம், மூன்று மாதங்களில் இழப்பீட்டைத் தீர்மானித்து வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில் இடைக்கால இழப்பீடாக 5 கோடி ரூபாயை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இரண்டு மாதங்களில் செலுத்த வேண்டும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதிகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மனு!