சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரம் 288 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் வசந்தாமணி தெரிவித்தார்.
இவர்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25 ஆயிரத்து 511 மாணவர்களும், சுயநிதிக்கல்லூரியிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14 ஆயிரத்து 777 மாணவர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர்.
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு ஜனவரி 7ஆம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜனவரி 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் 36 அரசு மருத்துவக்கல்லூரிகளும், கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியும் சேர்த்து 37 கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டில் 4 ஆயிரத்து 319 இடங்களும், 20 தனியார் மருத்துவக் கல்லூரியில் 2800 இடங்களும் உள்ளன.
சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் ஆயிரத்து 300 இடங்களும் உள்ளன. மேலும், அரசு பல்மருத்துவக் கல்லூரிகள் 2-ல் 165 இடங்களும், 18 சுயநிதிப் பல்மருத்துவக் கல்லூரிகளிலுள்ள ஆயிரத்து 125 இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டிலுள்ள 635 இடங்களுக்கும் என 7 ஆயிரத்து 100 எம்பிபிஎஸ் இடங்களுக்கும், ஆயிரத்து 925 பிடிஎஸ் இடங்களில் மாணவர்கள் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்படவுள்ளனர்.
2019-20 கல்வியாண்டில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் படிப்பில் கலந்துகொள்ள 61,079 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில் 57,054 மாணவர்கள் தகுதிபெற்றனர்.
மாணவர்களும், 2020-21ஆம் கல்வியாண்டில் 40,377 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர் . அவர்களில் 38,932 மாணவர்கள் தகுதிபெற்றனர்.
இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் 40,288 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்தாண்டு அளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் என மருத்துவக்கல்வி மாணவர்கள் சேர்க்கைக்குழு செயலாளர் வசந்தாமணி தெரிவித்துள்ளார்.
மருத்துவம், பல் மருத்துவப்படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாகவே நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: ‘கோவிட் சுனாமி‘யைக் கட்டுப்படுத்தும் உத்தி!