சென்னை கே.கே.நகர் கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசந்திரன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து வருகிறார். இவரது இருசக்கர வாகனம் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனதையடுத்து, அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் இவரது நண்பர் அபிஷேக் காணாமல் போன வண்டியை பார்த்ததாகவும், அதனை தமிழ்செல்வன் என்பவர் திருடி வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ராமசந்திரன், தமிழ்செல்வனை பிடித்து விசாரிக்க, அவர் தனது காட்டுப்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் ஆகாஷிடம் இருசக்கர வாகனம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து ராமசந்திரன் தனது முன்று நண்பர்களுடன் சென்று காட்டுப்பாக்கத்தில் உள்ள ஆகாஷை தேடி பிடித்தனர். பிறகு அவரை விசாரிப்பதற்காக ராமசந்திரன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று, ரூமில் அடைத்து கட்டை மற்றும் கொம்பால் அடித்து விசாரித்துள்ளனர். இதனால் காயமடைந்த ஆகாஷ் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக ராமசந்திரனின் தாயார் நடந்தவை குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மயக்கமடைந்த ஆகாஷை மீட்டு ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ராமசந்திரன் (20), அபிஷேக் (20), சந்தோஷ் குமார் (20), தீனா ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதியவரைக் கல்லால் அடித்துக் கொன்ற நபர் கைது!