சென்னை: இலங்கையில் இருந்து சென்னை வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (செப்.20) அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த முகமது நிஸ்தார் அபுசாலி என்ற பயணி சட்ட விரோதமாக தங்கத்தை துபாயில் இருந்து கடத்தி வருவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து உள்ளது.
அவர் சுங்கச் சோதனைக்கு செல்லும் முன்பு, குடியுரிமை சோதனைப் பகுதியில் உள்ள கழிவறையில் தங்கத்தை மறைத்து வைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவருடைய கூட்டாளியான சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர் சஞ்சய் தங்க பார்சலை கழிவறையில் இருந்து எடுத்து சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் கொண்டு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் பிரசாந்த் குமாருக்கு விமான நிலைய ஒப்பந்த ஊழியர் சஞ்சய் மீது சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவரை கேட்டில் நிறுத்தி சோதனை நடத்தி உள்ளார். அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த ஒரு பார்சலை வெளியில் எடுத்து பிரித்து பார்த்தார்.
அதனுள் மூன்று சிறிய பார்சல்களில் தங்க பசை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளார். உயர் அதிகாரிகள் உடனடியாக வந்து விசாரணை நடத்தினர். விமான நிலைய ஊழியர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து இருந்த பார்சலில் சுமார் 4 கிலோ தங்க பசை இருப்பது தெரிய வந்தது.
அதன் சர்வதேச மதிப்பு 2.2 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அந்தத் தங்கப் பசையையும், விமான நிலைய ஒப்பந்த ஊழியர் சஞ்சய்யும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்க அதிகாரிகள் சஞ்சய்யை கைது செய்து விசாரணை நடத்திய போது இலங்கையில் இருந்து சென்னை வந்த பயணி முகமது நிஸ்தார் அபுசாலி தான் தங்கத்தை கடத்தி வந்தார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் மற்றொரு விமானத்தில் இலங்கை செல்ல இருந்த நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மடக்கிப்பிடித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தங்கம் கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர் மற்றும் இலங்கை பயணி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:போதையில் தகராறு.. நண்பனை கட்டையால் கொடூரமாக தாக்கிய மதுவெறியர் - வீடியோ வைரல்!