சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் ரோட்டில் பத்மாவதி டிரேடர்ஸ் என்ற பெயரில், சந்திரபிரகாஷ்(55) என்பவர் டயர் மற்றும் டியூப் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், 26 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு நான்கு கார் டயர்கள் மற்றும் நான்கு டியூப் ஆகியவற்றை வாங்கியுள்ளனர்.
அதன் பின்னர் வாங்கிய பெருட்களுக்கான பில்லை அந்த நபர்களிடம் சந்திரபிரகாஷ் கொடுத்துள்ளார். அப்போது, அந்த அடையாளம் தெரியாத நபர்கள், பர்ஸை வீட்டில் மறந்து வைத்து விட்டதாகவும் வீட்டிற்கு வந்து டயரைக் கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்ளவும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய பிரகாஷ், கடையில் வேலை பார்க்கும் சிவா என்பவரிடம் டயரைக் கொடுத்தனுப்பி பணத்தை பெற்றுவருமாறு தெரிவித்துள்ளார். பின்னர் அவர், இருசக்கர வாகனத்தில் டயரை மாட்டிக் கொண்டு அந்த நபர்களுடன் சென்றுள்ளார்.
பின்னர் கீழ்ப்பாக்கம் கல்லறை சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அருகே வந்தவுடன் வீடு வந்துவிட்டதாகக் கூறிய அவர்கள், பணத்தை மேலே சென்று எடுத்து வைப்பதாகவும் சிறிது நேர்த்திற்குப் பின்பு மேலே வந்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர்.
இதனை நம்பிய சிவா, சிறிது நேரம் கழித்து மேலே பணத்தை வாங்குவதற்காக சென்றபோது, அவர்கள் அங்கு இல்லை. இதன் பின்னர், கீழே வந்து பார்த்தபோது, அவரது இருசக்கர வாகனத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த டயர் மற்றும் டியூபை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக சந்திரபிரகாஷ் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை!