சென்னை: தமிழ்நாட்டில் சில வருடங்களுக்கு முன் பொதுமக்களிடம் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி மோசடி செய்த ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, முதலீடு செய்த பணத்தை தங்க வியாபாரத்தில் முதலீடு செய்து இரட்டிப்பாக லாபம் தருவதாக ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றியுள்ளனர்.
இதில் சுமார் 1 லட்சம் நபரிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்ததாக 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, இதுவரை அதில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகியாக இருந்த ஹரீஷ் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது பாஜகவில் உயர் பதவி பெறுவதற்கு பணம் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.
இது தொடர்பாக தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் கடைசியாக கடந்த ஜூலை 8ஆம் தேதி முக்கிய நிர்வாகியான தீபக் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை கடந்த ஜூலை 17ஆம் தேதி முதல் இரண்டு முறை ஐந்து நாள் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தை மேற்பார்வையிடுவதற்காக இயக்குநராக நியமிக்கப்பட்ட 4 பேரில் முக்கியமான நபராக தீபக் பிரசாத் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இவரை காவலில் எடுத்து விசாரணை செய்ததில் 62 கோடி ரூபாய் அளவிற்கு தீபக் பிரசாத் வசூல் செய்து மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த 62 கோடி ரூபாய்க்கு யார் யார் பெயரில் எங்கு எங்கு சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து பட்டியலிடப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு டிஜிபி உத்தரவின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அடுத்த கட்டமாக முகவர்கள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை முக்கிய நிர்வாக இயக்குநர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்டமாக முகவர்கள் 500 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 200 முகவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வசூல் செய்த பணத்தை கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டமாக உள்ள 300 முகவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வரும் பணி நடைபெற்று வருவதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடியில் சுமார் 3,000 பக்கத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார், அடுத்த கட்டமாக அதிக லாபம் பார்த்த முகவர்களை விசாரணை செய்து பணம் வசூல் செய்துள்ளார்கள்.
மேலும், அவர்களின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக முகவர்கள் அளவிலான விரிவான விசாரணை நடத்தப்பட்டு விரைவில் அடுத்த கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர் பற்றாக்குறை: மகன்களுடன் குப்பை அள்ளிய பெண் கவுன்சிலர்!