சென்னை: கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் "சீரடி ஸ்ரீ சாய் சொல்யூசன்ஸ்" என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர், தினேஷ்குமார். இவர் ஆன்லைனிலும் மற்றும் தினசரி நாளிதழ்களிலும் பிரபல கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாங்கித் தரப்படும் என்று விளம்பரம் செய்துள்ளார். இதைப் பார்த்த பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலர் சான்றிதழ்களுடன் தினேஷ்குமார் அலுவலகத்தில் வேலை கேட்டு குவிந்தனர்.
அப்போது அவர்களிடம் முன்பதிவு கட்டணமாக ரூ2ஆயிரம் வசூலித்ததாகத் தெரிகிறது. பின்னர் வேலை உறுதி ஆகிவிட்டது என ஆசை வார்த்தைக் கூறிய தினேஷ்குமார் ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.50ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை வசூல் செய்துள்ளார். ஆனால், சொன்னபடி யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்த தினேஷ்குமார் திடீரென அலுவலகத்தை மூடிவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.
இதனால் பணம் கட்டியவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்தனர். 56-க்கும் மேற்பட்டோர் இதுபற்றி கோடம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ்குமார் கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 3 இடங்களில் அலுவலகம் நடத்தி வேலை தேடி அலையும் பட்டதாரிகளை குறி வைத்து வேலை வாங்கித் தருவதாக நூதனமான முறையில் அவர்களை ஏமாற்றி ரூ.17 லட்சம் வரை சுருட்டி தப்பியது தெரிந்தது.
அதற்கு உடந்தையாக பெண் ஊழியர் ஈஸ்வரி என்பவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான இருவரையும் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில் தினேஷ் குமார் அரும்பாக்கம் பகுதியில் வேறு ஒரு பெயரில் அலுவலகம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வருவதாகப் போலீசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற போலீசார் தினேஷ்குமார் மற்றும் ஈஸ்வரியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர்கள், பைக் ஏராளமான செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் , பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட தினேஷ்குமார் திருமுல்லைவாயில் பகுதியில் புதிதாக சொகுசு வீடு கட்டி, கார் வாங்கி ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
ஏற்கனவே இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் வழக்கு உள்ளது. மேலும் மதுரவாயல், ஒரகடம், திருவொற்றியூர், திருமுல்லைவாயில் ஆகியப் பகுதிகளில் அலுவலகம் நடத்தி பல லட்சம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதையும் படிங்க: வேலியே பயிரை மேய்ந்த கதை; பண மோசடி செய்த காவலர் கைது!