சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை 4 லட்சத்து 10 ஆயிரத்து 308 மாணவர்களும், 4 லட்சத்து 41 ஆயிரத்து 173 மாணவிகளும், ஒரு திருநங்கை என 8 லட்சத்து 51 ஆயிரத்து 482 பேர் எழுத உள்ளனர்.
11ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 3 லட்சத்து 67 ஆயிரத்து 535 மாணவர்களும், 4 லட்சத்து 20 ஆயிரத்து 242 மாணவிகளும், 6 திருநங்கை என 7 லட்சத்து 87 ஆயிரத்து 783 பேர் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரையில் எழுத உள்ளனர்.
11,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையிலான நாட்களில் நடத்தி முடிக்க அரசுத் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. மேலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்படும்போது, வேறு பள்ளியில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 406 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் இரண்டு கட்டமாக பிரிக்கப்பட்டு முதல்கட்டத்தில் மார்ச் 1,2,3,4 ஆகிய தேதிகளிலும், 2ஆம் கட்டத்தில் மார்ச் 6,7,8,9 ஆகியத் தேதிகளிலும் செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், கம்ப்யூட்டர் அறிவியல், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஜார்க்கண்ட் மாஜி CM