சென்னை: தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட), வரும் 28ஆம் தேதி பிற்பகல் முதல் dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் உள்ள பாடம் மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு, இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே ஹால் டிக்கெட் வழங்கப்படும். பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாளை குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு - 55,071 பேர் எழுதுகிறார்கள்!