சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த 5 நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் ஏற்படும் டெங்கு, காலரா உள்ளிட்ட நோய்களை தடுக்க அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 10 வாரங்களில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவமழையானது கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தில் கடந்த 5 நாட்களாகவே நன்றாக மழை பெய்து வருகிறது. ஓவ்வொரு வருடமும் இந்த மழை காலங்களில் தான் நோய் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
குறிப்பாக மலேரியா, டெங்கு, காலரா, சேற்றுப்புண் மற்றும் சளி நோய்கள் போன்ற பாதிப்புகள் இந்த மழைக்காலங்களில் தான் ஏற்படும். இந்த நோய்கள் மழைக்காலத்தில் தவிர்க்க முடியாதவை. ஏனெனில் மழைக்காலங்களில் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். சாலைகள் மற்றும் வீடுகளை சுற்றி தேங்கி இருக்கும் தண்ணீரில் கொசுக்கள் உருவாகின்றன.
குறிப்பாக ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் அதிகளவில் உருவாகும். இதன் மூலமே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் பரவுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை டெங்கு என்பது பெருமளவில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்த ஆண்டில் 10 மாதங்களில் மொத்தம் 5 ஆயிரத்து 600 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
மேலும் 492 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 5 நபர்கள் இறந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த 2 மாதங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. வருடம் தோறும் டெங்கு பாதிப்பு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை செல்லும். அதிகபட்சமாக 2012ஆம் ஆண்டில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டு 66 பேர் உயிரிழந்தனர்.
மற்றும் 2017 ஆம் ஆண்டில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டதில் 65 பேர் உயிரிழந்தனர். எனவே இந்த ஆண்டு பாதிப்புகளை குறைக்க வேண்டும். அதன்படி டெங்கு, மலேரியா, காலரா போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கு வருகிற 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழகம் முழுவதும் சுமார் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
காய்ச்சல், தலைவலி, சளி உள்ளிட்ட தொற்று உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு மருத்துவரை அணுகலாம். 10 வாரங்களில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவது மருத்துவத்துறை வரலாற்றிலேயே முதல் முறை ஆகும்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.