டெல்லி: சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, பொதுச்செயலாளர் பதவி கொண்டு வரப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்படுவதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்த மூல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டாார்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை தேர்தல் ஆணையம் அங்கீரிக்க வலியுறுத்தி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஏப்ரல் 12) நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், "கர்நாடகா சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதற்காக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இதுதொடர்பாக காலதாமதம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு முகாந்திரம் கிடையாது" என வாதாடப்பட்டது.
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், "சென்னை உயர்நீதிமன்றத்தில் மூல வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், இதை தேர்தல் ஆணையம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும்" என கேட்டுக் கொண்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, தேர்தல் ஆணையத்துக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கியதுடன், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.