செங்கல்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் இன்று (நவ-4) அதிகாலை குளிர் சாதன பெட்டி வெடித்ததில் உண்டான புகை மூட்டத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரப்பாக்கத்தைச்சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் ஒரு வருடத்திற்கு முன்னதாக உடல்நலக்குறைவால் உயிரிழந்ததற்காக இவரின் மனைவி கிரிஜா வருடாந்திர திதி கொடுப்பதற்காக அவரது உறவினர்களான சகோதரி ராதா, சகோதரர் ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி பார்கவி மற்றும் அவர்களது குழந்தை ஆராதனா ஆகியோர் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்ட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று (நவ-4) அதிகாலை 4 மணி அளவில் கிரிஜாவின் வீட்டிலிருந்து அவர்களது அலறல் சத்தம் கேட்டது. அண்டைவீட்டார்கள் வீட்டின் கதவை உடைத்து திறந்தனர். அங்கு கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகியோர் இறந்த நிலையிலும், அருகிலிருந்த அறையில் இருந்த பார்கவி மற்றும் குழந்தை ஆராதனா ஆகியோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையிலும், இருவரையும் மீட்டனர். பின், இருவரும் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் காவல் துறையினர், இறந்த மூவரின் உடலைக்கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்கவி, சிறுமி ஆராதனா இருவரையும் மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்: குளிர்பதனப் பெட்டி வெடித்து ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இன்று காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், குளிர்பதனப்பெட்டி வெடித்த வீட்டிற்குச்சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், ‘நீண்டகாலமாக குளிர் சாதனப்பெட்டி உபயோகப்படுத்தப்படாமல் இருந்ததால் எலக்ட்ரிக் பிரச்னை உண்டானதையடுத்து வெடித்துள்ளது’ எனத் தெரிவித்தார்.
மேலும் கிரிஜா குடும்பத்தினர் ஒரு வருடத்திற்கு முன்பாக துபாய் சென்று நேற்று தான் திரும்பியதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து பல கோடி ரூபாய் மோசடி..