செங்கல்பட்டு: சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மனைவி, கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். தாயைக் காண்பதற்காக அவரது 12 வயது மகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தந்தை மூலமாக அவர்கள் குடும்பத்திற்கு அறிமுகமான ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர், சிறுமியை ஆட்டோவில் ஏறுமாறு அழைத்துள்ளனர்.
தந்தைக்குத் தெரிந்தவர்கள் என்பதால் அவர்கள் அழைப்பை ஏற்ற சிறுமியும் ஆட்டோவில் ஏறி உள்ளார். ஆட்டோ சிறிது தூரம் சென்ற பிறகு, சிறுமிக்கு தங்களது செல்போனில் இருந்த ஆபாச படங்களை போட்டுக் காட்டி சிறுமியை மிரட்டி இருவரும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் அருகில் இருந்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி தமிழரசி, குற்றம் சாட்டப்பட்ட ராஜா மற்றும் கணேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஆறு மாத காலம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இதையும் படிங்க: வேலூர் வள்ளிமலை கோயில் படிக்கட்டில் இளைஞர் சடலம்: போலீசார் விசாரணை!