செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மாம்பாக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால், மாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டுவந்து வைத்திருந்தனர். ஆனால் அரசு அலுவலர்கள் தினந்தோறும் 100 அல்லது 200 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யவில்லை.
இது குறித்து விவசாயிகள் அலுவலர்களிடம் கேட்கையில், “நெல்லை கொள்முதல் செய்ய போதிய கோணி பைகள் இல்லை என்றும், நெல்லை ஏற்றுவதற்கு லாரி வர தாமதம் ஏற்படுகிறது எனவும் கூறியுள்ளனர். மேலும், வரும் நாட்களில் தங்களிடம் உள்ள நெல்லை கொள்முதல் செய்து விடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அங்கு உள்ள நெல் தூற்றும் இயந்திரம், எடை போடும் இயந்திரம் ஆகியவற்றை இரவோடு இரவாக கொள்முதல் நிலையத்திலிருந்து அலுவலர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். இதில் இன்று காலை அரசு அதிகாரிகள் நெல்லை எடைபோட்டு கொள்முதல் செய்து விடுவார்கள் என எதிர்பார்ப்புடன் வந்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் கொள்முதல் நிலையத்தில் உள்ள இயந்திரங்கள் எதுவும் இல்லாததால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர்.
மேலும் கொள்முதல் செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நெல்லை ஆங்காங்கே எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் வைத்திருக்கின்றனர். திடீரென அரசு அதிகாரிகள் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் மூடியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் நலன் கருதி மாம்பாகத்திலுள்ள உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தை இயக்க அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க...இந்திய மீனவர்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு