செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் அஸ்வினி. இவர் மாமல்லபுரம் கோயில் பகுதியில் ஊசி, மணி, பாசி போன்றவற்றை விற்று வருகிறார். அதே பகுதியில், நதியா என்ற நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினிக்கும், நதியாவுக்கும் இடையே நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் அஸ்வினி நதியாவை கத்தியால் வலது தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நதியாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ருத்மாங்கதன் தலைமையிலான போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பூஞ்சேரி பகுதியில் அஸ்வினி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார், அஸ்வினியை கைது செய்து திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 16) ஆஜர்படுத்தினர். திருக்கழுக்குன்றம் நீதிபதி கதிரவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை, வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அஸ்வினியை புழல் சிறையில் அடைத்தனர்.
யார் இந்த அஸ்வினி? பல மாதங்களுக்கு முன்பு மாமல்லபுரம் கோயில் ஒன்றில் நடைபெற்ற சமபந்தி போஜனத்தில் உணவருந்த அஸ்வினி அனுமதிக்கப்படவில்லை எனவும், இது குறித்து யூடியூப் சேனல் அஸ்வினியிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது எனவும், நரிக்குறவர் மக்களுக்கு உரிமை மறுக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் கூறினர்.
இந்த செய்தி தமிழ்நாடு முதலமைச்சர் வரை சென்ற நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அஸ்வினி வீட்டிற்கு வந்து நடந்ததை கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, இப்பெண் அன்புடன் அளித்த பாசிகள் உள்ளிட்டவற்றையும் அணிந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அவரது வீட்டில் உணவருந்தினார்.
இதனால், தனக்கு கிடைத்த அதீத புகழால் இவர் பல சர்ச்சைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இவர் அங்குள்ள கடைக்காரர்களை மிரட்டுவது, வம்பு இழுப்பது என அடாவடி செய்து வந்ததாக தெரிய வருகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட இப்பெண் அப்பகுதியில் அரசியல் தாதாவாக மாறிவிட்டதாக கூறப்படுகிறது.
இவரது நடவடிக்கைகள் காரணமாக எரிச்சலடைந்த வியாபாரிகள், இரு மாதங்களுக்கு முன்னதாக மாமல்லபுரம் காவல் துறையினரிடம் இப்பெண் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகார் அடிப்படையில், அஸ்வினி மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடல்; வனத்துறை அறிவிப்பு!