செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் இரண்டாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றமானது, இன்று (ஆகஸ்ட்.07) திறந்து வைக்கப்பட்டது. இதனை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திறந்து வைத்தார்.
இவ்விழாவில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற முதன்மை நீதிபதி பிரியா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பட்டம் மட்டும் அல்ல பட்டறிவுதான்
அப்போது பேசிய அவர், "கல்வி என்பது ஒருவர் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளும் பட்டங்கள் மட்டும் கிடையாது. பட்டங்களைக் கொண்டு, நாம் பெறும் பட்டறிவுதான் உண்மையான கல்வி.
நாம் பெற்ற கல்வியையும் பட்டங்களையும் கொண்டு, சமுதாயத்திற்கு நாம் என்ன செய்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும். நீதித்துறை தற்போது சரியான பாதையில் பயணிக்கிறதா என்பதை, நாம் சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலகட்டம் இது.
நீதிமன்றங்கள் இல்லாத சமுதாயம் வேண்டும் என்பது நடைமுறைக்கு ஒத்துவராத லட்சியம் தான் என்றாலும், அந்த லட்சியத்தை நோக்கி நாம் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
சமுதாய முன்னேற்றம்
நிர்வாகம், அரசியலமைப்பு ஆகியவற்றின் துணையோடு நீதித்துறை ஏற்றத்தாழ்வற்ற சமூகத்திற்கு வழி காண வேண்டும். சமுதாய முன்னேற்றம் என்பது எவ்வளவு தொழிற்சாலைகள், கட்டடங்கள் உள்ளது என்பதில் கிடையாது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும், ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தேவையான குடிநீர், வசிப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றியுள்ளோமா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
சமுதாயத்தில் நிலவும் பாரபட்சம், ஏற்றத்தாழ்வு போன்றவற்றை அகற்ற, இறையாண்மையின் மற்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து, நீதித் துறையுடன் கைகோர்த்து பாடுபட வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மாற்றுச்சான்றிதழ் வழங்க மறுத்தால் நடவடிக்கை - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை