செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சில காவலர்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்ததால், அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையில் காவலர்கள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், சில காவலர்களுக்கு மூச்சுத்திணறல், சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் மற்றும் இரண்டு புலனாய்வுத்துறை காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மூன்று காவலர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரை சேலையூர் காவல் நிலையத்தில் எட்டு காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது சக காவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.