செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா, சித்தாமூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், பல அரசுத் துறை அலுவலகங்கள், பல கட்டடங்களில் இயங்கிவருகின்றன.
அந்த ஒன்றியத்திற்கான ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையமும் இந்த வளாகத்தில்தான் செயல்பட்டுவருகிறது. ஒன்றியத்திற்குள்பட்ட பல கிராமங்களின் விவசாயிகள், தங்களின் விவசாயத் தேவைக்காக, இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் வந்துசெல்கின்றனர்.
தற்போது பெய்துவரும் மழையால், இந்த வளாகத்திற்குள் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக வேளாண் விரிவாக்க மையத்தைச் சுற்றி ஏரிபோல, வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், மையத்திற்கு வரும் விவசாயிகளும், அங்கு பணிபுரியும் அலுவலர்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர்.
விவாசாயிகளின் குறைகளைத் தீர்க்கும் வேளாண் விரிவாக்க மையமே, இப்படி தண்ணீரில் தத்தளிக்கும்போது, விவசாய நிலத்தை எப்படி அலுவலர்கள் கவனிப்பர் எனக் கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். அதே வளாகத்தில் இயங்கிவரும் ஒன்றியத்தின் மற்ற அலுவலர்களுக்கு இதைக் கண்டு நடவடிக்கை எடுக்க மனமில்லையா, அல்லது நேரமில்லையா என்பதே அனைவரின் ஆதங்கமாக எழுந்துள்ளது.
இதையும் படிங்க...மரபு சிலம்பக்கலையை மலைகிராம குழந்தைகளிடம் கொண்டுசேர்க்கும் இளைஞர்!