செங்கல்பட்டு: போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.
வேலைநிறுத்தத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள்: இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு சார்பில், போக்குவரத்துக் கழகங்களுடன் ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள், போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.8) நடைபெற்ற 3ஆம் கட்ட பேச்சு வார்த்தையிலும் சுமூக முடிவு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்தனர். வேலைநிறுத்த அறிவிப்பு வெளியான நிலையில், சென்னை மாநகரின் பல்வேறு பணிமனைகளில் தொழிலாளர்கள் பேருந்துகளை நிறுத்திவிட்டு, நேற்று மாலையே போராட்டத்தை தொடங்கினர்.
முதல் முதலாக திருவான்மியூா் மாநகரப் பேருந்து பணிமனையில், வேலைநிறுத்த அறிவிப்பு ஒட்டப்பட்டு, பேருந்துகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் மாநகரப் பேருந்துகள் படிப்படியாக நிறுத்தப்பட்டன. பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில், பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படாமல் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பணிகளுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
செங்கல்பட்டில் பேருந்துகள் இயக்கம்: செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை, செங்கல்பட்டு பணிமனையில் சுமார் 70 பேருந்துகள் இயங்கி வருகின்றன. தொழிற்சங்க போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50% பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பணிமனை, பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் ஓரளவுக்கு இயங்குவதால், பயணிகள் போக்குவரத்தில் அதிகளவில் சிரமம் ஏற்படவில்லை. செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ மாணவியர் மற்றும் பணி நிமித்தமாக சென்னை நோக்கிச் செல்லும் பெரும்பாலான பயணிகள் ரயில்களில் பயணிப்பதாலும் பாதிப்பு குறைவாக உள்ளது.
காஞ்சிபுரத்தில் பேருந்துகள் இயக்கம்: அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, காஞ்சிபுரம் பணிமனையில் 124 பேருந்துகள் உள்ளன. அவற்றுள் இன்று காலை 9 மணி நிலவரப்படி 70 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுவாகவே காஞ்சிபுரத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் பேருந்துகள் குறைந்த அளவில்தான் இயக்கப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு இருந்து வந்துள்ளது.
இதனால் வெளியூரிலிருந்து பட்டுச்சேலைகள் வாங்க காஞ்சிபுரம் வருவோரும், காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு வரும் பக்தர்களும் ஷேர் ஆட்டோ, கால் டாக்ஸி, வாடகை வாகனங்கள் போன்றவற்றின் மூலமாக பயணம் மேற்கொள்கின்றனர். மொத்தத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்படவில்லை.
ஆனால், தற்போது பணியில் இருக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரில் பெரும்பாலானோர் நேற்றே பணிக்கு வந்தவர்களாக இருக்கலாம் என்றும், இவர்கள் பணி முடித்து இறங்கினால், அடுத்ததாக பேருந்தை இயக்க வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை வைத்து மட்டுமே உண்மை நிலவரத்தைக் கணிக்க முடியும் என்றும் தெரிகிறது.
இதையும் படிங்க: சென்னையில் மாநகர் பேருந்துகள் முழுமையாக இயக்கம் - எம்டிசி மேலாண் இயக்குநர் தகவல்!